“டீ யாரோ காலிங் பெல் அடிக்கறா போல இருக்கு பாரேன் “
“ ஏன்னா எதோ சீதா கல்யாணம் பண்றாளாம். கைலயிலே
மஞ்சபை டைரி எடுத்துண்டு ஒரு மாமா வாசலிலே வந்து நிக்கறார் “
“சரி சரி போயுட்டு நாளை கார்த்தாலே வரச்சொல்லு ; நாம இங்கே
இருக்கோம்னு எப்படி தெரியுமாம் ?”
“கீழே ground floor லே யாரோ சொன்னாளாம் ;ஒரு அம்பதோ நூறோ
கொடுத்து அனுப்புவேளா அத்தவுட்டுட்டு “
“இல்லேடி ஸ்ரத்தையா பண்றான்னா நாளைக்கும் வருவார் “
இங்க அபார்ட்மென்ட் வாங்கி குடி வந்து இப்பதான் பத்து நாள்
ஆறது, படிச்சி முடிச்சி வேலைக்கு மேற்கே போய் முப்பத்தைந்து
வருஷம் ஆயுடுத்து . ரிடையர் ஆயி அங்கேயே இருந்திருக்கலாம் ,
ரயில்வே உத்தியோகம் .வருஷத்துலே மூணு செட் A,C, பாஸ் . வருஷா
வருஷம் தீபாவளிக்கு ஊருக்கு வந்தா, அடுத்து ரெண்டு நாளில் வரும்
தோப்பனார் ஸ்ரார்தம் முடிந்து கிளம்பணும். திரும்பவும் மே மாதம்
ஸ்கூல் லீவு வரும்போது ஒரு வாட்டி . சொந்த ஊரிலே ஒண்ணும்
கிடையாது , எனக்கு என்னவோ வர இஷ்டமில்லைதான் , இருக்கற
ஒரே பையனும் படிப்பு முடிந்து உத்தியோகம் ,கல்யாணம்
குழந்தைகள்ன்னு ஆயி கிழக்கே இருக்கான் . இவதான் நம்ம ஊர்
பக்கமே போயுடலாம்னு சொல்லி இங்கே வந்தாச்சு . இங்கே ஒண்ணும்
சுத்தமா பிடிக்கலை . ஆத்திலே உக்காந்து Facebook whatsapp ன்னு
நேரம் ஒட்டிண்டு இருக்கேன் .
சரி விஷயத்துக்கு வருவோம் . அடுத்த நா காத்தாலே டாண்ணு
எட்டு மணிக்கு நேத்திக்கு வந்த பிராமணன் வந்து நிக்கறார் ,
Calling பெல்லுக்கு அவசியம் இல்லாமல் கதவு திறந்து இருக்க .
“சார் எம்பேரு நாணா (எ ) நாராயணன். நேத்து வந்திருந்தேன் “
அந்த கீச்சு குரலும் முகமும் பரிச்சியமானதா இருந்தது ,
“நீங்க மாம்பாக்கம் மணி ஐயர் பிள்ளையா ?”
“அடடே சரியா சொல்றேள் ,நீங்க ?”
“நீங்க என்னடா நீங்க ; நான் கோடி ஆத்து குப்புசாமி ஐயர்
பிள்ளை குமாருடா ,என்னை எப்படிடா மறந்தே ?”
அப்புறம் என்னென்னவோ பழைய கதைகள் பேசி ஆச்சி .
எங்கப்பாவும் ஒரு பாகவதர்தான் . அந்த நாளிலே ஆரணி
கொசப்பாளையம் ராமர் கோவில் தெருவை சுத்தி மார்கழி
மாத திருப்பாவை திருவெம்பாவைக்கு அரை ட்ரையாருடன்
வீதி பஜனை போன கதையெல்லாம் பேசினோம் .
“டீ நாணாவுக்கு காபி கொண்டா ;அப்படியே நேக்கும்
ஒரு முழுங்கு . டேய் இவ்ளோ நாள் கழிச்சி பாக்கறோம் இருந்து
டிபன் சாப்பிட்டுதான் போகணும் “
“இல்லேடா குமார் நான் நிறைய இடம் போகணும் ;காபி
போறும். இன்னொரு நா வரேன் . நம்ப ஊரிலே வருஷாவருஷம்
ராம நவமி வரச்சே சீதா கல்யாணம் பண்றோம் . இது பதினெட்டாவது
வருஷம் . நேத்திக்கே மாமிகிட்டேன்னா அம்பதோ நூறோ வாங்கிண்டு
போயிருப்பேன் .நீ நம்ப ஊரு .ஆயிரம் ரூபா பிரிண்ட் பண்ண ரசீதிலே
பேரை எழுதிக்கிறேன் . உங்கப்பா எவ்ளவோ செய்ஞ்சிருக்கா .உனக்கு
இது ஒண்ணும் பெரிசில்லெ “
ஹும் நாணா வாங்கிண்டு கிளம்பிட்டான்
“நேத்திக்கே கொடுத்திருந்தால் நூறோட போயிருக்குமா ; உங்களுக்கு
மனசே வராதே “
வாசலில், மீண்டும் நாணா
“குமார் வண்டி சாவியை இங்கே வச்சுட்டேன் ; எடுத்துக்கறேன் . அப்புறம்
அடுத்த சீதா கல்யாணத்தில் பிரவரம் சொல்லும்போது நீங்க ரெண்டு பேரும்
சீதைக்கு தாயார் தோப்பனார் ஸ்தானத்திலே இருந்து நடத்தி கொடுக்கணும் .
ருபாய் பத்தாயிரம் ரெடி பண்ணி வச்சுக்கோ .வரேன் .”
“ஹாலில் மாட்டியிருந்த பட்டாபிஷேக படத்துலேந்து ராமர் என்னை
பார்த்து சிரிக்கற மாதிரி தெரிந்தது .